அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஆதார்’ கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!- – KALVICHOLAI TV..

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஆதார்’ கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! – KALVICHOLAI TV

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய, மாநில சலுகைகளைப் பெறுவதற்கும், அடிப்படை அடையாள அட்டையாகவும் ‘ஆதார் ‘ மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக பள்ளி மாணவர்களும் ஆதார் வைத்திருக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், இதை காரணம் காட்டிய பல பள்ளிகள், ஆதார் இருந்தால் தான் அட்மிஷன் வழங்கப்படும் என்று கூறியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, மாணவர் சேர்க்கையில் ஆதார் கட்டாயம் என்ற முறை தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், அதற்கு உரிய ஏற்பாடை பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய விவரங்களை EMIS விபரங்களுடன் இணைக்க வேண்டும். இதற்காக ஆதார் பதிவுக் கருவிகள் அனைத்து கிராமப்புற வட்டார வள மையத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆதார் பதிவு கருவிகளின் விபரங்களை அதற்கு உரிய பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், மற்ற ELCOT, TACTV நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆதார் கருவிகளை அந்தந்த நிறுவனங்களுக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணை பெறும் வகையில், அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் கணினி விரவப்பதிவாளர்கள், மாவட்ட UDISE Coordinator, கணினி வகைப்படுத்துநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட கால வரைக்குள் ஆதார் எண்னை பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதற்காக எந்த கட்டணமும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது.

ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அவற்றை திருத்தம் செய்ததற்கான ரசீதை மாணவர்களிடத்தில் வழங்க வேண்டும். மற்றபடி, முகவரி, தொலைபேசி போன்ற விபரங்களை மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம்.

5 வயது மற்றும் 15 வயது நிரம்பிய மாணவர்களுக்கு, அவர்களுடைய புகைப்படம், கண் கருவிழி ஆகியவை புதிதாக பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் பெறப்படாத மாணவர்களின் விபரங்களை, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மேற்பார்வையிட வேண்டும். அவர்களை ஆதார் பதிவு மையத்துக்கு அழைத்து வந்து ஆதார் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.